கலைமகளை செதுக்கித் தந்த‌ சிற்பி எங்கள் தலமை ஆசிரியர் திரு. சி. அப்புத்துரை அவர்கள்


எழுபதுகளின் ஆரம்பத்தில் மயிலிட்டி அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் தலமை ஆசிரியர் பதவியை பொறுப்பேற்று திரு. சி. அப்புத்துரை அவர்கள் முதன்முதலாக மயிலிட்டி மண்ணில் கால் பதித்தார்.  அப்போது அவர் ஒரு அள‌ப்பெரிய மாற்றத்தை எமது பாடசாலைக்கு செய்வார் என்று நாம் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.  தினமும் அவரது சொந்த ஊரான மயிலங்கூடலில் இருந்து சுமார் ஏழு மைல் தொலைவில் உள்ள எமது மயிலிட்டி கிராமத்துக்கு துவிச்சக்கர வண்டியில் வந்து தனது கடமையை செய்துவிட்டு மயிலங்கூடலுக்கு திரும்பிச்செல்லுவார்.  எப்போதும் வெள்ளை வேட்டி, வெள்ளை அங்கி, சால்வையோடு மிகவும் கம்பீரமாக காட்சியளிப்பார்.
எமது பாடசாலையின் பெயர் அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையாக இருந்தபோதும் பொதுவாக எல்லோராலும் “பே” பள்ளிக்கூடம் என்றுதான் அதனை அழைப்பது வழக்கம்.  இதற்கு வலு சேர்ப்பதுபோல் ஒல்லாந்தர்களால் அவர்கள் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களின் இடிபாடுகளும் காட்சி தந்தன.  இவ்வாறு பலரும் அழைப்பதனை ஆச்சரியத்துடன் கூர்ந்து அவதானித்த எங்கள் அதிபர் இதன் பின்னணியை அறிய ஆர்வமுற்றார். இது சம்பந்தப்பட்ட பல நூல்களை அலசி ஆராய்ந்தார்.  அவர் கண்டறிந்த சுவையான விடயம் என்னவென்றால் ஒல்லாந்தர் காலத்தில் அங்கு ஒரு பாடசாலை கட்டப்பட்டதாகவும் அதனை கட்டுவித்து பாடசாலையை நடத்தியவரின் பெயர் “BAY” என்பதும் அது காலப்போக்கில் மருகி “பே”யாக மாறிவிட்டது என்பதுதான்.
இந்த பெயர் மாறாட்டத்திற்கு ஒரு முடிவு கட்டவேண்டும் என்று எண்ணிய அதிபர் இப்பாடசாலைக்கு ஒரு நல்ல புதிய பெயர் சூட்டினால்தான் “பே” விட்டகலும் என்று பெற்றோர் சங்கம் மற்றும் நலன் விரும்பிகளிடம் கூறினார்.  அந்த நல்ல பெயர்தான் “கலைமகள் மகாவித்தியாலயம்” என வடிவெடுத்தது.
அதிபரின் அயராத உழைப்பினால் பாடசாலைக்கென புதிய கட்டிடங்கள் உருவாகின.  கலைமகள் மகாவித்தியாலயம் படிப்பில் மட்டுமின்றி விளையாட்டுத்துறையிலும் சிறந்து விளங்க வேண்டுமென்று அதிபர் விரும்பினார்.  வருடாந்த விளையாட்டுப்போட்டிகள் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டன.  பாடசாலைகளுக்கிடையேயான போட்டிகளில் “கலைமகள்” வெற்றிக்கனிகளை குவித்தாள்.  கலைமகள் மகாவித்தியாலயத்தின் புகழ் ஓங்கத்தொடங்கியது.
வருடா வருடம் பரிசளிப்பு விழாக்களும் விமரிசையாக நடாத்தப்பட்டன.  அதில் மாணாக்கர் பங்குபற்றும் கலை நிகழ்சிகளையும் நெறிப்படுத்தி கலைமகள் மகாவித்தியாலயம் என்ற பெயருக்கேற்றவாறு பாடசாலையை மாற்றம் பெறச்செய்தார்.  கலைமகளின் பெருமைக்கு மேலும் மெருகூட்டுவதுபோல் இருந்தது அவர் எழுதி வெளியிட்ட"பாரதி" என்னும் புத்தகம்.  அப்புத்தகத்தில் கலைமகள் மகாவித்தியாலயத்தின் வளர்ச்சி பற்றிய‌ கட்டுரையை புகைப்படங்களோடு பிரசுரித்தார்.  அது மட்டுமல்லாது ஒல்லாந்தர் காலத்தில் நடத்தப்பட்ட பாடசாலையின் புகைப்படங்களும் அதில் இடம்பெற்றமை ஒரு சிறப்பு வாய்ந்த அம்சமாகும்.  அதிபரின் அயராத உழைப்பினால் மயிலிட்டி நற்பயனடைந்து பூரித்து நின்றதை யாவரும் அறிவோம்.
அதிபரின் மனைவியும் பல வருடங்களாக எமது பாடசாலையில் ஆசிரியையாக பணிபுரிந்தார்.  தனது கணவரின் செயற்பாடுகளுக்கு அவர் உறுதுணையாக விளங்கினார்.
அதிபர் சைவத்திற்கும், தமிழுக்கும் ஆற்றிய தொண்டுகள் அளப்பரியன.  சைவத்தொண்டாற்றியோர் பற்றி பல‌ நூல்களை எழுதி வெளியிட்டார்.  அதில் ஒன்றை கனடாவிலும் வெளியிட்டு பெருமை சேர்த்தார்.
சுமார் பதினெட்டு ஆண்டுகளின் பின் 1988 ஆம் ஆண்டு அதிபர் ஓய்வுபெற்றார்.  அவர் எமது ஊருக்கு ஆற்றிய சேவைகளை யாராலும் அளவிடமுடியாது.  அவர் ஆற்றிய சேவைகளை நெஞ்சில் நிறுத்தி எம் உயிர் உள்ளவரை அவருக்கு நன்றி கூறுவோம்.
நன்றி
மயிலிட்டி மக்கள் ஒன்றியம் - கனடா.
குறிப்பு: அதிபர் திரு. சி. அப்புத்துரை அவர்கள் தனது மனைவியுடன் கனடாவில் வசித்து வருகிறார்.      அவருடன் தொடர்பு கொள்ள விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.